ராபாட், செப் 12- மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட வலுவான
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,854ஆக உயர்ந்துள்ளதாக
அந்நாட்டின் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மேலும் 2,562 பேர்
காயமடைந்துள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக
அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
இந்த நிலநடுக்கம் மர்ராகெச் நகருக்கு வட மேற்கே 75 கிலோ மீட்டர்
தொலைவிலும் 18.5 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக பாரம்பரிய இடமாக
யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்படுள்ள மர்ராகெச் நகரில் மிகவும்
மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்கும் பணியில்
அந்நாட்டின் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது வரை ஸ்பெய்ன், இங்கிலாந்து, கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய
நாடுகளிடமிருந்து உதவிக்கான வாக்குறுதிகளை மொரோக்கோ
பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக கருவூலம் மற்றும்
மொரோக்கோ வங்கியின் வாயிலாக சிறப்பு வங்கிக் கணக்கை அந்நாட்டு
அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கியது.


