நீலாய், செப் 12 - போர்ட் கிள்ளானில் உள்ள
ஒரு கிடங்கில் இம்மாதம் 4ஆம் தேதி
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில்
சுமார் 17 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 51.36
கிலோ மெத்தாம்பெட்டமைன் வகை
போதைப் பொருளை அரச மலேசிய சுங்கத்
துறை கைப்பற்றியது.
இந்நடவடிக்கையின் வழி அனைத்துலகப்
போதைப்பொருள் கடத்தல் கும்பலின்
நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக
சுங்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ
ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.
பிற்பகல் 12.45 மணியளவில்
மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையின்
போது சந்தேகத்திற்குரிய போதைப்பொருள்
அடங்கிய தெளிவான நிறத்திலான பைகள்
அடங்கிய ஐந்து பெட்டிகள் உள்பட ஆறு
பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல்
செய்ததாக அவர் சொன்னார்.
எஞ்சிய ஒரு பெட்டியில் ரப்பர் குழாய்
பாகங்கள் இருந்தன. இக்கும்பல் ரப்பர்
குழாய்களைப் பயன்படுத்தி
போதைப்பொருட்களைக் கடத்துவதாகத்
தெரிகிறது. சுங்கச் சோதனையின் போது
அவை உயர் அழுத்த ரப்பர் குழாய்கள்
அறிவிக்கப்படுகின்றன என அவர்
குறிப்பிட்டார்.
அந்ந போதைப் பொருள்கள் நம் நாட்டைச்
சேர்ந்தவை போல் தோன்றவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக
இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்புகிறோம்
என்று அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பின் போது கூறினார்.
கடத்தப்பட்ட பொருட்கள் கடல் வழியாக
ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி
செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதை
தவிர்க்க ஏற்றுமதியாளர்கள் போலி
நிறுவனத்தை பயன்படுத்துவதும்
விசாரணையில் தெரியவந்ததுள்ளது எனவும்
அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு
கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட 17
முயற்சிகளை தமது துறை
முறியடித்துள்ளதாகக் கூறிய அவர், இந்த
சம்பவம் தொடர்பில் 1952ஆம்
ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் பிரிவு 39பி(1)(ஏ) இன் கீழ்
விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இக்கடத்தல் தொடர்பில் இதுவரை கைது
செய்யப்படவில்லை என்றாலும் இதற்கு
பொறுப்பானவர்களைக் கண்டறிவதில்
ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் தமது துறை
இணைந்து செயல்படுகிறது என்று அவர்
கூறினார்.


