ஷா ஆலம், செப் 11- சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் விமான
நிலையத்தின் மறுமேம்பாடு மற்றும் கிள்ளான், கேரித் தீவு சரக்கு
துறைமுகத்தின் நிர்மாணிப்பு ஆகியவை 12வது மலேசியத் திட்டத்தின்
மத்திய தவணைக்கான ஆய்வில் இடம் பெற்றுள்ள முக்கிய போக்குவரத்து
மேம்பாட்டுத் திட்டங்களாக விளங்குகின்றன.
நாட்டில் பொது போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்துவதற்கு
வரையப்பட்டுள்ள பத்து திட்டங்களில் சுபாங் விமான நிலைய
விரிவாக்கமும் ஒன்றாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
சிக்கனமான, நம்பகமான, கட்டுபடி விலையிலான மற்றும் பாதுகாப்பான
பொது போக்குவரத்துச் சேவையை பொதுமக்கள் பெறுவார்கள் என்று
நாடாளுமன்றத்தில் இன்று 12வது மலேசியத் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மறுஆய்வை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
சுபாங் விமான நிலைய மறுமேம்பாடு தவிர்த்து, பினாங்கு அனைத்துலக
விமான நிலைய விரிவாக்கம், பினாங்கு மாநிலத்தின் இலகு ரயில் திட்டம்
பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின் 1பி கட்ட நிர்மாணிப்பு,
சரவா-சபா இணைப்புச் சாலை 11 ஆகிய திட்டங்களுக்கும் முன்னுரிமை
அளிக்கப்படும் என அவர் சொன்னார்.
ரெப்பிட் டிரான்சிட் பஸ் சேவை மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும்
ஜோகூர் பாருவில் பஸ் சேவையை விரிவுபடுத்துவது, செனாய்-டெசாரு
விரைவுச்சாலையை மேம்படுத்துவது, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை
விரிவாக்கம் செய்வது, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை தரம்
உயர்த்துவது, கேமரன் மலையில் தானா ராத்தா முதல் கியா பார்ம்
வரையிலான பகுதியை சீரமைப்பது ஆகிய திட்டங்கள் மீது கவனம்
செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கேரித் தீவில் புதிய துறைமுகத்தை அமைப்பதன் மூலம் கோலக்
கிள்ளான் துறைமுகம் வட்டார கப்பல் போக்குவரத்து மையமாக தரம்
உயர்த்தப்படும் என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.








