நிபோங் திபால், செப் 11- எட்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை
விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 164.8வது கிலோ மீட்டரில் நேற்று
அதிகாலை நிகழ்ந்தது.
பெர்லிஸ் மாநிலத்திலுள்ள உயர்கல்விக் கூடம் ஒன்றில் தன் பேரனை
சேர்ப்பதற்காக குடும்பத்தினருடின் அந்த 76 வயது மூதாட்டி காரில் சென்று
கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் புக்கிட் மின்யாக்-சுங்கை பாக்காப்
வெளியேறும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக செபராங் பிறை
செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் இங் ஆ
தியான் கூறினார்.
மரச்சட்டங்களை ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி கட்டுப்பாட்டை இழந்து
சாலையின் வலது புற தடுப்பை மோதிய வேளையில் அதே தடத்தில்
வந்த மற்றொரு மற்றொரு டிரெய்லர் லோரி அதனுடன் மோதியதாக
அவர் சொன்னார்.
அச்சமயம் அந்த குடும்பத்தினர் பயணம் செய்த டோயோட்டா கொரோலா
ரகக்கார் அந்த டிரெய்லர் லோரியுடன் மோதியது. இதன் காரணமாக அந்த
டிரெய்லர் லோரியிலிருந்த மரக்கட்டைகள் அந்த காரின் மீது விழுந்தன.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது
என்று அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் காரிலிருந்த அனைவரும் கடுமையாக காயமுற்றதாக
கூறிய அவர், 54 வயதான காரின் ஓட்டுநர் செபராங் பிறை
மருத்துவமனைக்கும் 48 வயதான அவரின் மனைவி, 19 மற்றும் 22
வயதுடைய இரு பிள்ளைகள் பாரிட் புந்தார் மருத்துவமனைக்கும்
கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான டிரெய்லர் ஓட்டுநரான
24 வயது ஆடவர் பாரிட் புந்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


