கோலாலம்பூர், செப் 10- இங்குள்ள உலு
லங்காட்டின் சுங்கை லெப்போவில் உள்ள
ஓய்வு விடுதியில் நடைபயணம் மேற்கொண்ட
21 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும்
10 ஆசிரியர்கள் குளவி கொட்டியதில்
காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் நிகழ்ந்த
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு
மாணவர்கள் அம்பாங் மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 25
மாணவர்களும் 10 ஆசிரியர்களும் சிகிச்சைக்காக உலு லங்காட்டில் உள்ள
14வது மைல் சுகாதார கிளினிக்கில் சிகிச்சைப்
பெற்றதாகச் சிவில் பாதுகாப்புப் படையின்
பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த ஆறு மாணவர்களும் தொடர்
சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,
அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகச்
சொன்னார்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குச்
சிவில் பாதுகாப்புப் படை, சுகாதார அமைச்சு
மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
மருத்துவ உதவியாளர்கள் மூலம் சம்பவ
இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது
என்றார் அவர்.
தலைமைத்துவ முகாமில் பங்கேற்பதற்காக ஷா ஆலமில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 133 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முதல் அந்த முகாமில் தங்கியிருந்தனர்.








