கோல குபு பாரு, செப் 10 - சிலாங்கூர்
விவசாய மேம்பாட்டுக் கழகம் உற்பத்தி செய்த
ஏஹ்சான் அரிசிக்கு கடந்த மாதம் 10 முதல் 15
விழுக்காடு வரை தட்டுப்பாடு இருந்ததை
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி ஒப்புக் கொண்டார்.
எனினும், தற்போது நிலைமை
கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.
மாநிலம் தழுவிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஜூவாலான் ஏஹ்சான்
ரஹ்மா மலிவு விற்பனையின் போது இந்தப்
பற்றாக்குறை கண்டறியப்பட்டதாக கூறிய
அவர், இவ்விவகாரத்தை அணுக்கமாகக்
கண்காணிக்கும்படி மாநில அடிப்படை வசதி
மற்றும் விவசாய மேம்பாட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம்
மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும்
வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆகிய
தரப்பினரைத் தாம் கேட்டுக் கொண்டதாகத்
தெரிவித்தார்.
இருப்பினும், சில உற்பத்தி நடவடிக்கைகள்
மற்றும் சிகிஞ்சானில் கிடைக்கும் உபரி அரிசி
மூலம் இப்பிரச்சனையை நிவர்த்தி
செய்துள்ளோம் என்று நான் நம்புகிறேன் என
அவர் குறிப்பிட்டார்.
நான் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாகத் தினமும் கண்காணித்து
வருகிறேன். எந்த மாவட்டத்தில் பற்றாக்குறை
இருந்தாலும் விரைந்து நாங்கள் நிவர்த்தி
செய்வோம். இதுவரை இந்த பற்றாக்குறை
மோசமான நிலையை எட்டவில்லை
என்பதோடு கட்டுப்பாட்டிலும் உள்ளது என்று
அவர் நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர்
பல்கலைக்கழகச் சிலாங்கூர் 17வது
பட்டமளிப்பு விழாவில் கூறினார்.
ஏறக்குறைய ஒரு வருடமாக நடத்தப்பட்ட
எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்காக
மாநில அரசு 2 கோடி வெள்ளிக்கும்
அதிகமாக செலவிட்டுள்ளதாக அமிருடின்
மேலும் தெரிவித்தார்.
நாங்கள் இந்தத் திட்டத்தைத் தொடர்வோம்.
ஏனென்றால், பொருள்களின் விலை நிலைப்படுத்தப்படுவதற்கும் குறைவதற்கும்
நாங்கள் காத்திருக்க விரும்புகிறோம். அரிசிக்கான 3.00 வெள்ளி மானியம் தொடரும். அரிசி மட்டுமின்றி கோழி, முட்டை ஆகியவற்றின் விலையும்
தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். இதன் மூலம் மக்களின் சுமையை குறைக்க உதவும் என்றார் அவர்.








