மூவார், செப் 10- நேற்று நடைபெற்ற
சிம்பாங் ஜெராம் சட்டமன்ற
இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்
வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் 3,514
வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
பெற்றார்.
அமானா கட்சியின் பக்ரி தொகுதி துணைத்
தலைவரான அவர் 13,844 வாக்குகளைப்
பெற்றார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட
பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்
டாக்டர் முகமது மஸ்ரி யாஹ்யாவுக்கு 10,330
வாக்குகள் கிடைத்த வேளையில்
சுயேச்சையாக களம் இறங்கிய தொழிலதிபர்
எஸ் ஜெகநாதன் 311 வாக்குகளை மட்டுமே
பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.
இந்த தேர்தல் முடிவை சிம்பாங் ஜெராம்
தொகுதிக்கான தேர்தல் அதிகாரி ஜமில்
ஹஸ்னி அப்துல்லா நேற்று இரவு 9.12
மணிக்கு மூவாரில் உள்ள சுல்தான்
இப்ராஹிம் ஜூபிலி மண்டபத்தில்
அறிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில் 40,379
வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளதை தேர்தல் ஆணையத்தின்
தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் சிம்பாங்
ஜெராம் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ சலாவுடின்
அயோப் 8,749 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சருமான சலாவுடின்
அயூப்பின் சிறப்பு அதிகாரியாக இருந்த 56
வயதான நஸ்ரியின் இந்த வெற்றியானது
இந்தத் தொகுதியைக் கைப்பற்றும்
பெர்க்காத்தான் நேஷனலின் கனவை
முடிவுக்கு வந்தது.
அமானா கட்சியின் துணைத் தலைவராகவும்
இருந்த சலாவுடின் கடந்த ஜூலை 23ஆம்
தேதி காலமானதைத் தொடர்ந்து சிம்பாங்
ஜெராம் தொகுதியில் இடைத்தேர்தல்
நடைபெற்றது.








