ஜொகூர் பாரு, செப் 10- பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாட் 18,641 வாக்குகள்
பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இதன் வழி மறைந்த டத்தோஸ்ரீ
சலாவுடின் ஆயோப் வசமிருந்த இத்தொகுதியை அமானா கட்சி மீண்டும்
தக்க வைத்துக் கொண்டது.
ஏழாவது முறையாகப் தேர்தலில் போட்டியிட்ட சுஹைஸான் 48,283
வாக்குகளைப் பெற்ற வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ஜூல்கிப்ளி ஜாபருக்கு 29,642
வாக்குகளும் சுயேச்சை வேட்பாளரான சம்சுடின் முகமது பவுஸிக்கு 29,642
வாக்குகளும் கிடைத்தன.
இந்த தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் அதிகாரி மிஸ்வான்
யூனஸ் இங்குள்ள சுல்தான் இப்ராஹிம் ஜூப்ளி இந்தான் மண்டபத்தில்
நேற்றிரவு 10.09 மணிக்கு அறிவித்தார்.
இந்த வெற்றியின் வழி பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல்
கூட்டணி உருவானப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது
நாடாளுமன்ற உறுப்பினராக சுஹைஸான் விளங்குகிறார்.
ஜொகூர் மாநில அமானா கட்சியின் உதவித் தலைருமான சுஹைஸான்
மறைந்த வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ
சலாவுடின் ஆயோப்பின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.








