ஜாகர்த்தா, செப் 8- பாலஸ்தீனர்களின் உரிமைக்கு உரிய மதிப்பினை
அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில் அனைத்து நாடுகளும்
ஒருமைப்பாட்டை புலப்படுத்த வேண்டும் என்பதோடு உக்ரேன் மீது ரஷியா
படையெடுத்த போது எடுத்த அதே நிலைப்பாட்டை இப்போதும் எடுக்க
வேண்டும் என்றார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக கலந்துரையாடல்
பங்காளிகளான அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா,
ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் நடத்தப்பட்ட
சந்திப்பின் போது அன்வார் இந்த விவகாரத்தை வலியுறுத்தினார்.
அதே சமயம் இஸ்லாம்ஃபோபியா மற்றும் இன அடக்கு முறைகளுக்கும்
தீர்வு காணப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உக்ரேன் மீது ரஷியா படையெடுத்த போது அவர்கள் அச்சமின்றி குரல்
கொடுத்ததோடு ரஷியாவை கடுமையாகச் சாடினர். அதே சமயம்
பாலஸ்தீன விவகாரங்கள் என வரும்போது அவர்கள் மௌனமாகி
விடுகின்றனர் என்று அவர் சொன்னார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையுடன் இணைந்து
நடத்தப்படவிருக்கும் நியுயார்க் உச்ச நிலை மாநாட்டில் சவூதி அரேபியா
முன்னெடுக்கவிருக்கும் பாலஸ்தீனம் மீதான நடவடிக்கையை அனைத்து
வெளியுறவு அமைச்சுகளும் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்
கொண்டார்.
பாலஸ்தீன விவகாரங்கள் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளும்
ஐரோப்பாவும் அந்த உச்சநிலை மாநாட்டில் விவேகமான முடிவை எடுக்க
வேண்டும் என்று அன்வார் கூறினார்.
மதத் தீவிரவாதம் மற்றும் இஸ்லாம்ஃபோபியா போன்ற விவகாரங்களைக்
கையாள நியுயார்க்கில் மலேசியா-துருக்கி இடையே சிறப்பு கூட்டம்
நடைபெறுவதற்குத் துருக்கி பரிந்துரைத்துள்ளதாகவும் அன்வார்
குறிப்பிட்டார்.








