கோலாலம்பூர், செப் 8- கடத்தப்பட்டதாக
நம்பப்படும் இளைஞர் ஒருவர் பூச்சோங் 14
வது மைலில் உள்ள பெட்ரோல் நிலையம்
அருகே இறந்து கிடந்தது தொடர்பில் நான்கு
பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது 25 வயது மகன் அவருக்கு அறிமுகமான
நபர்களால் ஜாலான் புக்கிட் செராஸ்,
கம்போங் முஹிபாவில் இம்மாதம் 4ஆம் தேதி
கடத்தப்பட்டதாக அந்த இளைஞரின் தந்தை
அளித்த புகாரின் பேரில் நான்கு சந்தேக
நபர்களும் கைது செய்யப்பட்டதாக
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்
டத்தோ அல்லாவுடின் அப்துல் மாஜிட்
கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் நடத்திய
விசாரணையில் கடத்தப்பட்டவரின் உடல்
நேற்று நள்ளிரவு 12.55 மணியளவில் கண்டு
பிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இக்கடத்தல் தொடர்பில் 27 முதல் 35
வயதுக்குட்ட நான்கு ஆடவர்கள் கைது
செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவர்கள்
அனைவருக்கும் போதைப்பொருள்
தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக்
கொண்டுள்ளனர் என்றார்.
அனைத்து சந்தேக நபர்களும் ஆள் கடத்தல்
தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 365
பிரிவின் கீழ்
விசாரணைக்காக இம்மாதம் 10ஆம் தேதி
வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைக்கு உதவ மேலும் இரண்டு
நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்
செராஸ் காவல் நிலையத்தை 03-
92845050/5051 என்ற எண்களில்,
கோலாலம்பூர் காவல்துறையை 03-21159999
என்ற எண்களில் அல்லது அருகில் உள்ள
காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- பெர்னாமா








