கோலாலம்பூர், செப் 6- மூன்று பாரம்பரியத் தொழில் துறைகளில் அந்நியத்
தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதற்கான விண்ணப்பத்தில் ஒரு பகுதி
அங்கீகரிக்கப்படுகிறது என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
அறிவிப்பின் வழி நாட்டிலுள்ள சுமார் 3,000 இந்திய வர்த்தகர்கள்
பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
சிகையலங்கரிப்பு, ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு அந்நியத்
தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அனுமதி முடக்கப்பட்டிருந்த
நிலையில் அத்துறை சார்ந்த வர்த்தகர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி
வந்ததாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்
சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு தீபாவளிக்கான நற்செய்தியாக விளங்குகிறது.
இந்த விழாக்காலத்தின் போதுதான் இத்துறைகளைச் சேர்ந்த வணிகர்கள்
அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள மெனாரா பேங்க் ராக்யாட்டில் இந்த மூன்று
தொழில்துறைகளையும் சார்ந்த வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்திய
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தில் ஒரு பகுதியை தாம்
அங்கீகரிப்பதாக பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதே சமயம்,
அந்த மூன்று துறைகளிலும் நிலவும் காலி இடங்களை நிரப்புவதற்காக
உள்நாட்டினர் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றும் அவர்
நிபந்தனை விதித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய
விவகாரம் என்பதால் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும்
பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மூன்று துறைகளைச் சேர்ந்த
வர்த்தகர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைத்த
துணையமைச்சர் சரஸ்வதி, அந்நியத் தொழிலாளர்களைத் தொடர்ந்து
சார்ந்திருப்பதை தவிர்க்கும் விதமாக இத்துறைகளில் உள்நாட்டு
இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என தாம்
அவர்களிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
நடப்பு சூழலை சில தரப்பினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்ள வர்த்தகர்கள் அனுமதிக்கக் கூடாது என்பதோடு வர்த்தக
லைசென்ஸ்களை அந்நிய நாட்டினரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும்
தாம் வலியுறுத்தியதாக சொன்னார்.








