ஷா ஆலம், செப் 5 - 2003-2022 வரை 11,832 பண்ணைகள் மைகேப் (myGAP) (பூச்சிக்கொல்லி இல்லாத) சான்றிதழ் பெற்றுள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் 326 பண்ணைகள் ஆர்கானிக் (myOrganic) சான்றிதழைப் பெற்றுள்ளன என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
சுற்றுச்சூழலில் சமநிலையைப் பேணுவதற்கு இதுபோன்ற விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதே இவ்விரு சான்றிதழ்களின் நோக்கமாகும் என்றார்.
அதுமட்டுமில்லாமல், இத்திட்டம் தொழில்துறையின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படமால் இருப்பதை உறுதிப்படுத்தும்
“உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதன் மூலமும், இயற்கை வளங்களின் திறமையான பயன்பாட்டை மேம்படுத்த வேளாண் உணவுத் துறை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
"அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள விவசாயிகள் நல்ல விவசாய முறைகளை பின்பற்றும் விகிதத்தை இது அதிகரிக்கிறது," என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான பயிர் துணைப் பிரிவில் myGAP மற்றும் myOrganic சான்றிதழ் பெற்றதற்கான பாராட்டு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தின் மடாணி கருப்பொருளில் உள்ள "M" என்ற எழுத்து நிலைத்தன்மையைக் குறிக்கிறது என்று முகமட் விளக்கினார்.
"2023 பட்ஜெட்டில் அரசாங்கம், செயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, myGAP சான்றிதழைப் பெற விவசாயிகளை ஊக்குவிக்க RM1.6 மில்லியன் சிறப்பு ஊக்கத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா








