ஜோகூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.50 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

4 செப்டெம்பர் 2023, 4:17 AM
ஜோகூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.50 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

ஜோகூர் பாரு, செப் 4 - இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் (எச்.எஸ்.ஏ.) அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக  முதல் கட்டமாக 50  கோடி வெள்ளியை  உடனடியாக ஒதுக்கீடு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும்  பல புதிய உயரமான மருத்துவமனைத்  தொகுதிகள் கட்டப்படவுள்ளதாக அன்வார் கூறினார்.

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் விரைவில் கட்டப்படும் என்றும் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு முதல் கட்டமாக எங்களுக்கு 50 கோடி வெள்ளி தேவைப்படுகிறது. நிதி அமைச்சுடன் விவாதித்த பிறகு இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக 50 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார். சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன்  ஆகியோரும்  இதில் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமனை சுமார் 100 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. கார் நிறுத்துமிடத்தைக் கட்டுவதற்கும் மேலும் பல உயரமான மருத்துவமனை வளாகங்களை உருவாக்குவதற்கும் போதுமான இடவசதி உள்ளது. இதன்மூலம்  மருத்துவச் சேவைகளை தரம் உயர்த்தவும்  நோயாளிகளின் நெரிசலைத் சமாளிக்கவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நான் முன்பு பார்த்ததைவிட  இப்போது மருத்துவமனையின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. வார்டுகளின் நடுவில் படுக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு நீண்ட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அதனைத் தீர்க்கும் பொறுப்பு எனக்கும்   டாக்டர் ஜலிஹாவுக்கும்  வந்துள்ளது. அதற்காக விரைவாக நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.