கோலாலம்பூர், ஆக 28- நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட
வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம்
சுல்தான் இஸ்கந்தார் கூறியுள்ளார்.
அன்வார் நிர்வாகம் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சவால்களை தாம்
உணர்ந்துள்ளதாக சீனப் மொழிப் பத்திரிகையான சின் சியு டெய்லிக்கு
அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நிதி நெருக்கடியை பிரதமராக பதவியேற்றப் பின்னர்தான்
அன்வார் உணர்ந்துள்ளார் என்றும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு பிரதமர் மேற்கொண்ட பயணத்தின்
போது பல்வேறு சாதகமான அம்சங்களைப் பெற்றது குறித்து தாம்
மனநிறைவு கொள்வதாகவும் சுல்தான் தெரிவித்தார்.
பிரதமருடன் தாம் சிறப்பான நடபுறவை பேணி வருவதாக கூறிய அவர்,
சில சமயங்களில் தனது ஆலோசனைகளை அவர் பெறுவதோடு சில
சமயங்களில் தமக்கு சில பரிந்துரைகளையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.
சீனாவுடன் அணுக்கமான நட்புறவை மலேசியா பேணி காப்பது அவசியம்
என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.
மலேசியா எனது இரண்டாவது இல்லம் எனும் திட்டத்தை சுற்றுலா, கலை
மற்றும் கலாசார அமைச்சின் கீழும் பிரதமரின் நேரடிப் பார்வையிலும்
வைக்கும் முடிவை தாம் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.




