கோலாலம்பூர், ஆக 27- தேசிய தின கண்காட்சிக்கு தயாராகும் பொருட்டு அரச மலேசிய ஆகாயப் படை விமானங்கள் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை தாழ்வாகப் பறந்து பயிற்சியில் ஈடுபடும்.
அரச மலேசிய ஆகாயப் படை மற்றும் மலேசிய ஆயுதப்படை விமானங்களை உட்படுத்திய வான் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய பொறுப்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய ஆகாயப் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த பயிற்சியில் ஆகாயப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்படர்கள் ஈடுபடும் என்று அது தெரிவித்தது.
இந்த பயிற்சியின் போது இராணுவ விமானங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பாக புத்ரா ஜெயா மற்றும் சிலாங்கூரில் தாழ்வாகப் பறக்கும் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.
இந்த காலக்கட்டத்தில் அரச மலேசிய ஆகாயப்படை மற்றும் மலேசியத் தற்காப்புப் படைகளின் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதைக் கண்டு பதட்டமோ அச்சமோ அடைய வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


