ஜோர்ஜ் டவுன், ஆக 25- தொழில் துறையினருக்கு சுமையாக இருந்து
வரும் நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை
எளிதாக்குவதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை சீராக
மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று மலேசிய
உற்பத்தியாளர் சங்க சம்மேளனம் கருதுகிறது.
அனைத்து துறை சார்ந்தவர்களும் தங்கள் குத்தகை நிலங்களுக்கான
அனுமதியை புதுப்பிக்கும் போது வழங்கப்படும் கழிவை மாநில மற்றும்
மத்திய அரசுகள் தங்களின் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தின் போது 90 விழுக்காடு குறைக்கும் என்று தாங்கள்
எதிர்பார்ப்பதாக அந்த சம்மேளனத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ
லீ தியோங் லீ கூறினார்.
மலேசியாவில் வர்த்தகம் புரிவதற்கான இலகுத் தன்மையை இந்த
நடவடிக்கை ஓரளவு மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் இலக்கவியல் முன்னெடுப்புகளை
மேம்படுத்துவதற்கு ஏதுவாக அத்துறையினருக்கு அரசாங்கம் நிதியுதவி
வழங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கான இலக்கவியல்மய
மானியத் திட்டத்திற்கான தொகையை அதிகரிக்கும்படி அரசாங்கத்தை
நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தற்போது மலேசியாவிலுள்ள
நிறுவனங்கள் 50 விழுக்காடு அல்லது 5,000 வெள்ளி கழிவை பெற
முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனத்தின்
54வது ஆண்டு விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு
கூறினார்.


