செய்தி சு. சுப்பையா
பெஸ்தாரி.ஜெயா ஆகஸ்ட்.23- பத்தாங் பெர்ஜுந்தை ( பண்டார் பெஸ்தாரி ) வட்டாரத்தில் புகழ் பெற்ற 5 தோட்ட மக்கள் தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவ் வட்டாரத்தில் உள்ள 245 குடும்பத்தை சேர்ந்த மக்கள் இத்தொடர் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர். மிஞ்ஞாக், மேரி, நைகல் கார்டன், சுங்கை திங்கி, புக்கிட் தாகார் ஆகிய 5 தோட்ட மக்கள் பெர்ஜெயா வீடமைப்பு நடவடிக்கை குழுவின் சார்பில் இப்போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று அக்குழுவின் தலைவர் கமலகண்ணன் மனோகரன் கூறினார்.
எங்கள் இப்போராட்டம் இழுபறி நிலையில் இருக்கிறது. மீண்டும் மந்திரி புசாராக பதவியேற்று இருக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி எங்களது போராட்டம் முறையாக தீர்வு காண தலையிட வேண்டும் என்ற 245 இந்திய தோட்ட பாட்டாளிகள் சார்பில் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம் என்று இவர்கள் தெரிவித்தனர்.
இந்த 5 தோட்டங்களும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. ஐந்து , ஆறு தலைமுறைகளாக இத்தோட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டங்களை சொப்பின் நிறுவனத்திடமிருந்து பெர்ஜாயா வாங்கியது.
பெர்ஜெயா வாங்கிய பின்பு 69 பேர் வயதாகி விட்டது என்று கூறி தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு மேல் உழைத்த தலை முறையினரை வெளியேற்ற பெர்ஜெயா நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்திய மக்கள் கொதித்து எழுந்தனர். அன்று முதல் எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கினர்.
டத்தோ ஸ்ரீ பழனிவேல், கமலநாதன், திருமதி ஜூன் ஆகிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களது போராட்டத்தை தீர்த்து வைக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது காலம் கனிந்து விட்டது. மாநில அரசும் மத்திய அரசும் ஒற்றுமை அரசாங்கம் தான். இந்த சூழலில் எங்களது நீண்ட நெடிய போராட்டத்திற்கு தீர்வு காண மந்திரி புசார் முன் வர வேண்டும்.
தான் ஸ்ரீ கலிட் இப்ராஹிம், டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோர் எங்கள் போராட்டத்திற்கு நல்ல தீர்வு காணாமல் கை விட்டனர். தற்போது வந்திருக்கும் மந்திரி புசார் உதவ முன் வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
இந்த வீட்டுடமை பிரச்னைக்கு பெர்ஜெயா நிறுவனம் முதன் முதலில் 12.75 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இந்த நிலம் போதாது என்ற போராடியதால் தற்போது 20 ஏக்கர் நிலம் ஒதுக்க பட்டுள்ளது.
எங்களது இந்த சொந்த வீட்டுடமை பிரச்னை முறையாக தீர்வு காண தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹொயொங் வழி மந்திரி புசாரின் கவனத்திற்கும், வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்று நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
இந்த தோட்டங்களிலும் 4 தமிழ் பள்ளிகள், 5க்கும் மேற்பட்ட கோயில்கள், பள்ளிவாசல், சீனர் கோவில், கடைகளும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிட தக்கது.


