கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அவமதிக்கும் வகையிலான கருத்தைப் பதிவிட்டது தொடர்பில் முகநூல் கணக்கின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்டு 18ஆம் தேதி காணொளி வழி வெளியிடப்பட்ட அந்த பதிவு தொடர்பில் சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமட் ஜெய்ன் கூறினார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, வழக்கு மற்றும் சட்டப் பிரிவு, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அந்த முகநூல் கணக்கின் உரிமையாளர் நேற்று அழைக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.
அந்த காணொளி தொடர்பில் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவு, தண்டனைச் சட்டத்தின் 504 வது பிரிவு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் 233 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணைக் கட்டத்தில் உள்ளது என்றும் இந்த விசாரணையை சீர்குலைக்கும் அல்லது சமூகத்தில் ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக முகமது ஷுஹைலி கூறினார்.
சமீபத்தில் சிலாங்கூரில் உள்ள கிள்ளான் நகரில் முஸ்லீம் அல்லாத ஒருவரை இஸ்லாமிற்கு மாற்றியதில் அன்வாரின் பங்கு குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியதாகவும், அதனால் அவரை வாக்குமூலம் அளிக்க போலீசார் அழைத்ததாகவும் இன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


