சுபாங் ஜெயா, ஆக 21- சிலாங்கூல் கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எஸ்.) 2023ஆம் ஆண்டிற்கான சூப்பர் லீக் கிண்ணத்தை வென்றதன் மூலம் கால்பந்து வரலாற்றில் ஷா ஆலம் மாநகர் மன்றம் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது.
விளையாட்டாளர்களின் கட்டொழுங்கு மற்றும் கடுமையான உழைப்பு இந்த வெற்றிக்கு மூலகாரணமாக விளங்கியதாக அக்குழுவின் பயிற்றுநர் அகமது ஃபைசால் யூனுஸ் கூறினார்.
நேற்றிரவு நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் விளையாட்டு பொறுப்பாளர்கள், விளையாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் காட்டிய கடப்பாடு இந்த வெற்றியை ஈட்டுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.
எம்.பி.எஸ்.ஏ. கிளப் வரலாற்றில் முதன் முறையாக இந்த கிண்ணத்தை நாங்கள் வென்றுள்ளோம். விளையாட்டாளர்களின் புரிந்துணர்வும் நான் வழங்கிய பயிற்சி மற்றும் விளையாட்டு நுட்பங்களை ஆட்டக்காரர்கள் முழுமையாக பின்பற்றியதும் இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு முக்கியமானதாக விளங்கியது என அவர் சொன்னார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சாம்பியன்ஷிப் லீக் போட்டிக்கு தயாராவது தங்களின் அடுத்த இலக்காகும் என அவர் சொன்னார். சூப்பர் லீக் கிண்ண வெற்றியாளர் என்ற முறையில் சிலாங்கூர் லீக் சாம்பியன்ஷிப் போட்டிக்கு எம்.பி.எஸ்.ஏ. குழு இயல்பாகவே தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த ஆட்டத்தில் அதிக மதிப்புமிக்க விளையாட்டாளர் விருதை எம்.பி.எஸ்.ஏ. குழுவின் ஆட்டக்காரர் எம். கலையரசன் வென்றார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது தமக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக கூறிய அவர், சூப்பர் லீக் போட்டியில் கிண்ணத்தை வென்றது மற்றும் சிறந்த விளையாட்டாளராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.


