ECONOMY

மழையின் போது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒதுங்குவதற்கு நெடுஞ்சாலைகளில் 119 இடங்கள் உருவாக்கம்

14 ஆகஸ்ட் 2023, 5:25 AM
மழையின் போது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒதுங்குவதற்கு நெடுஞ்சாலைகளில் 119 இடங்கள் உருவாக்கம்

கோலாலம்பூர், ஆக 14- மோட்டார் சைக்கிளோட்டிகள் மழையில் நனைவதையும் விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்கும்  நோக்கில் அவர்கள் ஒதுங்குவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 119 பிரத்தியேக இடங்கள் உருவாக்கப்படவுள்ளன.

பித்தாரா மடாணி முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தில் பொதுப் பணி அமைச்சு, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் ஆகியவற்றோடு 33 நெஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தை வரவேற்றுப் பேசிய மிரோஸ் எனப்படும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழக கூட்டமைப்பின் உறுப்பினர் தெங்கு அகமது மிர்வான் தெங்கு மாமுட், இதர வாகனமோட்டிகள் வேகத்தைக் குறைப்பதற்கும் கவனமுடன் செல்வதற்கும் ஏதுவாக இந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒதுங்கும் இடம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் பொருத்தமான இடத்திலும் போதுமான அளவிலும் வைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதிகமான மோட்டார் சைக்கிளோட்டிகள் தஞ்சம் புகும் இடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களும் விரிவான ஆய்வினை மேற்கொள்ளும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

மழையின் போது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒதுங்குவதற்கு ஏதுவாக நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் 119 பிரத்தியேக இடங்கள் உருவாக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கடந்த ஆகஸ்டு 4ஆம் தேதி கூறியிருந்தார்.

அந்த 119 பிரத்தியேக இடங்களில் 40 இவ்வாண்டில் நிர்மாணிக்கப்படும் வேளையில் எஞ்சியவை அடுத்தாண்டில் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் 352 மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒதுங்கும் இடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக இந்த இடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.