செய்தி;- சு. சுப்பையா
கோலசிலாங்கூர் பு.மெலாவத்தி.ஆகஸ்ட்.7- புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து பெரிக்காத்தான் கூட்டணி கேள்வி எழுப்பி வருகிறது. அவர்களுக்கு இந்திய சமுதாயம் தக்க பதில் அடி கொடுக்க வேண்டும். புக்கிட் மெலவாத்தியில் தீபன் சுப்ரமணியம் வெற்றி பெற வாக்களியுங்கள் என்று சார்ஸ் சந்தியாகோ இந்திய வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ ஹஜி ஹடி அவாங்கும் இந்தியர்களை வந்தேறிகள் என்று நமது உரிமை மீது கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்கள் வாய் மூடி மௌனிக்கின்றனர். இவர்கள் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்க முடியாது.
பெரிக்காத்தான் தலைவர்களுக்கு இந்திய சமுதாயம் தக்க பதிலடி இத்தேர்தலில் கொடுக்க வேண்டும். நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதே தக்க பதிலடியாகும்.
நேற்று புக்கிட் மெலாவாத்தியில் உள்ள சுங்கை ரம்பை வாக்களிப்பு மையத்திற்கு உட்பட்ட வாக்காளர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடந்தது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு சார்ல்ஸ் சந்தியாகோ தலைமை தாங்கினார்.
நாட்டு பிரதமராக ஆற்றல் படைத்த தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் கிடைத்துள்ளார். இதே போல் சிலாங்கூர் மாநிலத்தில் ஆற்றல் படைத்த மந்திரி புசாராக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நமக்கு கிடைத்துள்ளார்..
இந்திய சமுதாயத்தில் நிலவும் வறுமை துடைத்தொழிக்கும் திட்டத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் இறங்கியுள்ளார். அவருக்கு தோள் கொடுக்கும் நிலையில் சிலாங்கூர் மாநிலத்திலும் டத்தோ ஸ்ரீ அமிருடின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
மாநில மக்களுக்கு இலவச காப்புறுதி திட்டம், தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி திட்டம், மாதர்களுக்கு சிறு தொழில் பயிற்சி திட்டம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டம் என்று நாட்டிலே சிறந்த மாநில அரசாக சிலாங்கூர் அமிருடின் தலைமையில் வெற்றி நடை போடுகிறது.
இந்த மேம்பாட்டு திட்டங்களில் இந்தியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தீபன் போன்ற இளைஞர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.


