கோலாலம்பூர், ஆக 5- அந்நிய நாட்டினரின் கிராமம் போல் விளங்கிய
இங்குள்ள தாமான் புக்கிட் செராஸ் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை நடத்திய அதிரடிச்
சோதனையில் 425 பேர் கைது செய்யப்பட்டனர்.
குப்பைத் தொட்டிகளிலும் அமலாரிகளிலும் பதுங்கி கொள்வதன் மூலம்
அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்கு அந்த அந்நிய
நாட்டினர் மேற்கொண்ட முயற்சியில் பலனளிக்கவில்லை.
அதிக எண்ணிக்கையிலான அந்நிய நாட்டினர் படையெடுப்பு
காரணமாக சமூகவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள்
கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இரு வார காலமாக
வேவு நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் இந்த அதிரடிச்
சோதனையில் தாங்கள் ஈடுபட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்
துறை இயக்குநர் ஷியாம்சுல் பாஹ்ரின் மோஷின் கூறினார்.
குடிநுழைவுத் துறையின் 60 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள்
அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை 1.00 முதல் 4.00 மணி வரை
இந்த அதிரடிச் சோதனையை நடத்தியதாக இச்சோதனை
நடவடிக்கைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.
முறையான பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை
விட அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருந்தது, சுற்றுலா விசா
காலாவதியானது, அங்கீகரிக்கப்படாத தற்காலிக வேலை அனுமதி
அட்டையை வைத்திருந்தது ஆகிய குற்றங்களின் பேரில் மொத்தம்
425 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களில் 252 வங்காளதேசிகள், 108 மியன்மார்
பிரஜைகள், இரு பிலிப்பினோக்கள், 30 இந்தோனேசியர்கள், ஆறு
கம்போடியர்கள், 20 நேப்பாளிகள், ஏழு பாகிஸ்தானியர்களும்
அடங்குவர். 372 ஆண்கள் மற்று 53 பெண்கள் அடங்கிய இந்த அந்நிய
நாட்டினர் அனைவரும் எட்டு முதல 54 வயது
வரையிலானவர்களாவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கைதான அனைவரும் கட்டுமானம், துப்புரவு உள்பட பல்வேறு
துறைகளில் வேலை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய
வந்ததாகவும் அவர் கூறினார்.


