ECONOMY

சிலாங்கூரில் இணைய வேலை வாய்ப்பு மோசடி காரணமாக வெ.1.6 கோடி இழப்பு

2 ஆகஸ்ட் 2023, 1:36 AM
சிலாங்கூரில் இணைய வேலை வாய்ப்பு மோசடி காரணமாக வெ.1.6 கோடி இழப்பு

ஷா ஆலம், ஆக 2- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான 215 மோசடிச் சம்பவங்களில் 1 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்படுள்ளது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 82.3 விழுக்காடு அதிகமாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

கடந்தாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 660,127 வெள்ளி உள்ளடக்கிய 38 மோசடிக் சம்பவங்கள் மட்டுமே பதிவாகின என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத தொலைபேசி எண்கள் வாயிலாக பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸ்ஆப் எனும் புலனம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவது இக்கும்பலின் வழக்கமான பாணியாகும்.

அந்த விளம்பரத்தில் உள்ள இணைப்பைச் சொடுக்கி பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிடும்படி அக்கும்பல் கேட்டுக் கொள்ளும். தொடக்கத்தில் இந்த இணைப்பில் உள்ள மின்-வர்த்தகத் தளத்தில் சிறிய தொகையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவர்.

தங்களின் உண்மையான ஈடுபாட்டை நிரூபிப்பதற்காக தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைச்  செலுத்தும்படி அக்கும்பல் கேட்டுக் கொள்ளும். இது தவிர கொள்முதல் செய்யும பொருள்களின் தொகைக்கு ஏற்ப 10 முதல் 30 விழுக்காடு வரை கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் அக்கும்பல் ஆசை வார்த்தை கூறும் என்று அவர் சொன்னார்.

பின்னர் அதிகத் தொகையிலான பொருள்களை மின்-வர்த்தகத் தளத்தின் வாயிலாக பொருள்களை வாங்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்டபடி கமிஷன் தொகை கிடைக்காது போன பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வர் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.