ஷா ஆலம், ஜூன் 29-சிலாங்கூரில் உள்ள 939 பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாக பணிக்காக தலா 1,000 வெள்ளியைப் பகிர்ந்தளிக்கும் பணி வரும் ஜூலை மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில கல்வி இலாகாவின் கீழுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நிதி வழங்கப்படும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
இந்த நிதியைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய வங்கி கணக்கறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பான சுற்றறிக்கையை சிலாங்கூர் மாநில கல்வி இலாகா வெளியிடும் என்று அவர் சொன்னார்.
பின்னர் இந்த விண்ணப்பங்கள் எம்.பி.ஐ.யிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பின் நிதி விநியோகம் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து 939 பள்ளிகளுக்கும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் இந்த நிதி வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாக பணிகளுக்காக மாநிலத்தில் உள்ள அனைத்து 939 பள்ளிகளுக்கும் தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


