MEDIA STATEMENT

ஐ.பி.யு, குறியீடு 100ஐ எட்டினால் மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைளை நிறுத்துவீர்- கல்வியமைச்சு உத்தரவு

28 ஏப்ரல் 2023, 6:18 AM
ஐ.பி.யு, குறியீடு 100ஐ எட்டினால் மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைளை நிறுத்துவீர்- கல்வியமைச்சு உத்தரவு

புத்ராஜெயா, ஏப் 28- நாட்டில் தற்போது நிலவும் வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்தை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக் கழகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் பட்சத்தில் வகுப்புகளுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதும் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் அடங்கும் என்று கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

காற்றின் தரக்குறியீடு 100க்கும் அதிகமாக பதிவான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பான நினைவூட்டல் கடிதம் அனைத்து மாநில கல்வித் துறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்வியமைச்சின் கீழுள்ள கல்விக் கழகங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அதிக வெப்பத்தால் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

அனைத்துக் கல்விக் கூடங்களிலும் போதுமான அளவு சுத்தமான நீர் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். அதே சமயம் மாணவர்களும் நீரை சொந்தமாக கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் தங்கும் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் போதுமான அளவு நீர் உள்ளது உறுதி செய்யப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது-

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.