கோலாலம்பூர், ஏப் 15 நோன்புப் பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கான தடையை அமல்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் தேதிகளிலும் (நோன்புப் பெருநாளுக்கு முன்னர்) ஏப்ரல் 24 மற்றும் 25ஆம் தேதிகளிலும் (நோன்புப் பெருநாளுக்குப் பின்னர்) இந்த தடை அமல்படுத்தப்படும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தது.
நோன்புப் பெருநாள் சமயத்தில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகரிக்கும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது கூறியது.
அக்காலக்கட்டத்தில் கனரக வாகனங்களும் தனியார் வாகனங்களும் ஒரே சமயத்தில் சாலையைப் பயன்படுத்தம் பட்சத்தில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கான சாத்தியத்தைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது எனவும் அது குறிப்பிட்டது.
இந்த சாலைத் தடை அமலாக்க காலத்தில் சாலைகளில் தேசிய வேக வரம்பும் குறைக்கப்படும். இக்காலக்கட்டத்தில் தேசிய வேக வரம்பு, ஊராட்சி மன்ற வேக வரம்பு மற்றும் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 80 கிலோ மீட்டராக குறைக்கப்படும்.
பெருநாள் காலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்புச் சோதனையை மேற்கொள்வர் என்றும் அமைச்சு அறிவித்தது.


