ECONOMY

இந்திய தொழில் முனைவோருக்கு உதவ இரு புதிய திட்டங்கள்- ஐ-சீட் அறிமுகம்

13 ஏப்ரல் 2023, 9:31 AM
இந்திய தொழில் முனைவோருக்கு உதவ இரு புதிய திட்டங்கள்- ஐ-சீட் அறிமுகம்

ஷா ஆலம், ஏப் 13- இந்திய சமூகம் வர்த்தகத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மேலும் இரு புதிய வர்த்தக உதவித் திட்டங்களை  ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா அறிமுகப்படுத்த இருக்கிறது.

“டாக்டர் கோக்கனட் போஸ்“ மற்றும் “அக்குவாஃபோனிக்“ எனும் அவ்விரு திட்டங்களும் பரீசார்த்த அடிப்படையில் விரைவில் தொடங்கப்படும் என்று ஐ-சீட் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டிக்கம் லுட்ஸ் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வர்த்தக உபகரணங்களை வழங்கும் பிரதான திட்டம் தவிர்த்து இவ்விரு திட்டங்களும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

‘டாக்டர் கோக்கனட் போஸ்“ திட்டம் இளநீர் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருள்களின் விற்பனை மேம்பாட்டை மையமாக கொண்டுள்ள வேளையில் “அக்குவாஃபோனிக்“ திட்டம் மீன் வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய இரு துறைகளை ஒருங்கே உள்ளடக்கிய  ஒரு திட்டமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

“டாக்டர் கோக்கனட் போஸ்“ திட்டத்தில் பங்கு பெறுவோருக்கு இளநீர் மற்றும் அந்த உணவுப் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பான வகைகளை விற்பனை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு முக்கிய நகரங்களில் ஊராட்சி மன்றத்தின் அனுமதியுடன் சிறிய அங்காடிக் கடைகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

அதோடு மட்டுமின்றி அவர்களுக்கு ஜெனேரட்டர் இயந்திரம், இளநீர் வைக்கும் கூண்டு, இளநீர் வெட்டும் சாதனம், இளநீர் சுளை அரைக்கும் கருவி, விளம்பரப் பதாகை மற்றும் வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக 100 இளநீர் ஆகியவையும் இலவசமாக தரப்படும். இந்த வியாபாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட 9,500 வெள்ளி வரை செலவிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வீட்டிற்கு அருகே சிறிய அளவில் நிலம் உள்ளவர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக வேளாண் மற்றும் மீன் வளர்ப்பு உள்ளடக்கிய அக்குவாபோனிக் திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது என்றார் அவர்.

இளநீர் வியாபார திட்டத்தில் அறுவருக்கும் அக்குவாபோனிக் திட்டத்தில் 15 பேருக்கும் தொடக்கக் கட்டமாக வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.