கோலாலம்பூர், ஏப் 9- இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்களை நிந்திக்கும் (3ஆர்) சம்பவங்களை விசாரிக்க அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.) சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் தலைமையிலான இந்தக் குழுவை வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு வழி நடத்தும் என்று பி.டி.ஆர்.எம். செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.
இத்தகைய புகார்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் சட்டத் துறைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை ஏழு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவற்றில் நான்கு ஆட்சியாளர்களை நிந்தனை செய்தது சம்பந்தப்பட்டவையாகும்.. இது தவிர சமயம் சார்ந்த இரு புகார்களும் இனம் சார்ந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
இப்புகார்கள் சம்பந்தப்பட்ட மூன்று விசாரணை அறிக்கைகள் சட்டத் துறை தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில் மேலும் நான்கு புகார்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்த புகார்களின் அடிப்படையில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் மேலும் ஒருவரைத் தாங்கள் தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.


