ECONOMY

 எம்.பி. சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் டத்தோ ரமணன்

26 மார்ச் 2023, 10:51 AM
 எம்.பி. சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, மார்ச் 26- நாடாளுமன்ற உறுப்பினருக்கான தமது முழு சம்பளத்தையும் தொகுதியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி,   தமது தேர்தல் வாக்குறுதியை  நிறை வேற்றியிருக்கிறார் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன். 

15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றி பெற்றால், நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை தாம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்றும்மாறாக அப்பணம் சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படும் வகையில் முறையாக பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குப்  பகிர்ந்தளிக்கப்படும் என்றும் டத்தோ ரமணன் வாக்குறுதியளித்திருந்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றி பெற்ற டத்தோ ரமணன், பதவியேற்ற மூன்று மாதங்கள் கழித்து தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை  இங்கு பண்டார் பாரு சுங்கை பூலோவில் பிரசித்திப் பெற்ற தேவி ஸ்ரீ ராஜமாரியம்மன் ஆலயத்திற்கு  பகிர்ந்தளித்தார். 

நேற்று மாலை ஆலயத்திற்கு நேரடியாக வருகை புரிந்த அவர், நிர்வாகத் தலைவர் டத்தோ மூர்த்தியிடம் அதற்கான காசோலையை வழங்கி, ஆலயத்திற்கு தேவையான இதர வசதிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். எம்.பி. சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கும் தேர்தல் வாக்குறுதியை, தங்கள் ஆலயத்திலிருந்து நிறைவேற்றியிருக்கும் டத்தோ ரமணனின் பெருந்தன்மையை தாங்கள் வெகுவாகப் பாராட்டுவதாக டத்தோ மூர்த்தி குறிப்பிட்டார்.

 இந்த நன்கொடையின் நோக்கம் உணர்ந்து, சமூகநல மேம்பாட்டு நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கும் சீனர் ஆலயத்திற்கும் தமது சம்பளத்தை டத்தோ ரமணன் நேற்று பகிர்ந்தளித்தார். 

இனி, மாதந்தோறும் சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு தமது சமபளப் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த நிதியை பெறுகின்ற வழிபாட்டுத் தலங்கள், சமூகநல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, நாட்டில் எம்.பி. சம்பளத்தை வழிப்பாட்டுத் தலங்களின் சமூக நல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கி, தேர்தலில் சொன்னப்படி செய்து காட்டிய முன்னுதாரணத் தலைவராக டத்தோ ரமணன் திகழ்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.