ஷா ஆலம், மார்ச் 17- பொது மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைக்கு மாற்றாக கூடுதல் இலக்குடன் கூடிய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப் படவிருக்கும் இந்த திட்டம் இவ்வாண்டு மத்தியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் ஹிஷாம் ஹஷிம் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் எதிரொலியாக ஏற்பட்ட பொருள் விலையேற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் அமல்படுத்தப் பட்டதாக அவர் சொன்னார்.
இந்த திட்டத்தை இன்னும் தொடர்வது அவ்வளவு உசிதமல்ல. இதைவிட சிறப்பான மற்றும் ஆக்ககரமான வழி முறையை மே மாதத்திற்கு பின்னர் அறிமுகப்படுத்த உள்ளோம். மெனு ரஹ்மா திட்டத்துடன் இணைந்து இதனை மேற்கொள்வதற்கு சாத்தியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று சுங்கை ராமால் உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அத்தியாவசிய மலிவு விற்பனையில் விற்கப்படும் ஆறு வகையான பொருட்களை வாங்குவதன் மூலம் பொதுமக்கள் சந்தையை விட 40 விழுக்காடு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
பொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் புதிய வழி முறையை அமல்படுத்தும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்


