ALAM SEKITAR & CUACA

ஜாலான் லங்காட் பத்து 7 பகுதியில் ஆலயம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை-  எம்.பி.கே. விளக்கம்

17 மார்ச் 2023, 4:07 AM
ஜாலான் லங்காட் பத்து 7 பகுதியில் ஆலயம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை-  எம்.பி.கே. விளக்கம்

ஷா ஆலம், மார்ச் 17- ஜாலான் லங்காட் பத்து 7 பகுதியில் ஆலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் மறுத்துள்ளது.

கடந்த 2020 செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற ஓரிட செயல்குழு கூட்டத்தில் இந்த ஆலய நிர்மாணிப்பு விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பான முடிவு பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத்தின் தொடர்பு மற்றும் வர்த்தகப் பிரிவு இயக்குநர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.

பொறியியல் துறை நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கேற்ப பிரதான சாலையிலிருந்து ஆலயம் வரையிலானப் பகுதியில் முறையான சாலை மற்றும் கால்வாய் வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இது தவிர ஆலயத்தின் கட்டுமானம் நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் இல்லாதது அந்த விண்ணப்பத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆலயத்திற்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை மற்றும் கால்வாய்க்கான இடமும் காணப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் இந்த ஆலயம்  அமைக்கப்படுவதை ஆட்சேபித்து கம்போங் சிஜங்காங், கம்போங் மேடான் மற்றும் கம்போங் கெபுன் பாரு பத்து 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அந்த ஆலயத்தின் நிர்மணிப்புப் பணிகளை நிறுத்தக் கோரும் உத்தரவு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இந்த ஆலயப் பிரச்சனை தொடர்பில் இரு தரப்புகளின் கருத்துகளையும் கேட்டறிவதற்காக வரும் மார்ச் 24ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்விவகாரம்  லீமாஸ் எனப்படும் இஸ்லாம் அல்லாத சமய விவகாரச் செயல்குழுவின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்படும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.