ஷா ஆலம், மார்ச் 10- பெட்டாலிங் ஜெயா, செக்சன் 14 பகுதியில் உள்ள சுங்கை பெஞ்சாலா ஆற்றோர பொழுதுபோக்கு நடைபாதை நேற்று பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.
சுமார் 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றோர நடைபாதையை நிர்மாணிக்கும் பணி கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் முற்றுப் பெற்றதாக புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.
ஆசியா ஜெயா எல்.ஆர்.டி.நிலையத்தையும் பெட்டாலிங் ஜெயா செக்சன் 19 வர்த்தக மையத்தையும் இந்த நடைபாதை இணைக்கிறது என்று அவர் குறிப்பட்டார்.
இந்த நடைபாதை பாதசாரிகளுக்கு இதமான சூழலையும் பொதுபோக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு மாற்று பயண மார்க்கத்தையும் வழங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
முதன் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை 409,000 வெள்ளிச் செலவில் மேற்கொண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கு ஏற்ற பயணத் தடத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கில் புக்கி காசிங் தொகுதி அமல்படுத்தி வரும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த நடைபாதை செக்சன் 19இல் இருந்து செக்சன் 14 மில்லினியம் ஸ்குவெயர் வரைக்குமான பகுதியை இணைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


