ஷா ஆலம், மார்ச் 10- உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 165 வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக இம்மாதம் 7ஆம் தேதி வரை 81 வாகனங்களின் உரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கைவிடப்பட்ட வாகன மேலாண்மை நடவடிக்கை வழிகாட்டிக்கு ஏற்ப இந்த வாகனங்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நகராண்மைக் கழகம் கூறியது.
சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையை ரத்து செய்வதற்கும் அவற்றை அழிப்பதற்கும் அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் நீதிமன்றத்திடமிருந்து பெறப்படும் என அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த வாகனங்களின் உரிமையை ரத்து செய்வது மற்றும் அழிப்பது தொடர்பான பணிகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இடையூறு ஏற்படும் வாகனங்களை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்று பொது மக்களை நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு 500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்பதோடு சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது என அது எச்சரித்தது.


