லாபிஸ், மார்ச் 9- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களுக்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 291 பேர் அம்மாநிலத்திற்குப் பயணமாகினர்.
இந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் இரண்டாம் கட்ட உதவிப் பயணத்தில் 12 ஊராட்சி மன்றங்களின் பணியாளர்கள், செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு, டீம் சிலாங்கூர், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளதாக மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த மூன்று நாள் உதவிப் பயணத்தில் டேங்கர் லோரிகள், மண்வாரி இயந்திரங்கள், குப்பை அகற்றும் லோரிகள், நான்கு இயக்க சக்கர வாகனங்கள் ஆகியவை உடன் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைக்கும் பணிக்கு சேவை மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் முகமது ஹனாபி அகமது தலைமை தாங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணிக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பிய மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்டப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை சீராக மேற்கொள்வதில் வட்டார மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இங்குள்ள லாபிஸ் மாவட்ட சமூக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் நடவடிக்கை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.


