ஜகார்த்தா, பிப் 24: இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு மலுகுவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (2002 GMT வியாழன்) அதிகாலை 03.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் மொரோதாய் தீவு மாவட்டத்திலிருந்து வடமேற்கு 133 கிலோமீட்டர் (கிமீ) தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், வடக்கு சுலவேசியின் அருகிலுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கும், பொது உடைமைகளுக்கும் சேதம் ஏற்படவில்லை என்று தேசியப் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
"மொரோதாய் தீவு மாவட்டத்தில் வசிப்பவர்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர்" என்று வடக்கு மலுகுவில் உள்ள பேரிடர் அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் யுஸ்ரி ஏ காசிம் கூறினார்.
"பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


