வாஷிங்டன், பிப் 23 - தென் துருக்கியில் இம்மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,556 ஆக உயர்ந்துள்ளதாகத் துருக்கிய உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு நேற்று தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 11 மாகாணங்களில் ஒன்றான ஹாத்தாயில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார் .
உலகின் மிகப்பெரிய அளவிலான மற்றும் மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என்று சோய்லுவை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இடிந்து விழுந்த 26,000 வீடுகளை கவனிக்க குறிப்பிட்டக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் 110,000 சதுர கிலோமீட்டர் (42,471 சதுர மைல்கள்) பரப்பளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு நெதர்லாந்து நாட்டைவிட மூன்று மடங்கு பெரியதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். கஹ்ராமன்மாராஸ் பகுதியை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஹடாய், காஜியான்டெப், அதியமான், மாலத்யா, அதானா, தியர்பாகிர், கிலிஸ், உஸ்மானியே, சான்லியுர்ஃபா மற்றும் எலாசிக் ஆகிய 10 மாநிலங்களை உலுக்கியது.
நிலநடுக்கத்தால் அழிந்த பகுதிகளில் வரும் மார்ச் மாத தொடக்கத்தில் 200,000க்கும் மேற்பட்ட வீடுகளைத் துருக்கி கட்டத் தொடங்கும் என்றும் ஒரு வருடத்திற்குள் அந்தப் பணி நிறைவடையும் என்றும் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.


