யாலா(தாய்லாந்து), பிப் 18- இங்குள்ள பெத்தோங் நகரின் ஜாலான் சந்தராதோயில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மலேசியர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளனார்.
கடந்த வாரம் சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அவ்வாடவரின் முன்னாள் மனைவி விசாரணைக்காக தாய்லாந்து போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாற்பது வயதான தாய்லாந்து பிரஜையான அந்த பெண்மணி பெந்தோங்கிலுள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெத்தோங் மாவட்ட காவல் துறை தலைவர் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளி என சந்தேகிக்கப்படும் நபர் அதே தினத்தன்று சொக்லா, சானாவிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அவ்விவருவரையும் தாங்கள் கைது செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்மணிக்குச் சொந்தமான பொழுதுபோக்கு மையத்தில் வேலை செய்த சமயத்தில் தாக்குதலுக்குள்ளான ஆடவருடன் தமக்கு முன்பு ஒரு முறை தகராறு ஏற்பட்டதை பிடிபட்ட ஆடவர் ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தாம் சாலையோரம் வீசிவிட்டதோடு மோட்டார் சைக்கிளை பெந்தோங்கில் மறைத்து வைத்து விட்டதாக அவ்வாடவர் விசாரணையின் போது தெரிவித்தார் என அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.


