கிள்ளான், பிப் 18- மாநில அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இன்று இங்குள்ள ஸ்ரீ பெராந்தாவ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தொடங்கியது.
இந்த திட்டம் மாநிலத்திலுள்ள இதர எட்டு மாவட்டங்களில் வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை விட சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் மாநில அரசு மக்கள் நலனுக்காக மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவப் பரிசோதனை, மலிவு விற்னை உள்பட பல்வேறு அங்கங்கள் இடம் பெறுகின்றன என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டில் ஒன்பது மாவட்டங்களை இலக்காக கொண்டு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை நடத்தினோம். உலு லங்காட் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு உலு சிலாங்கூர் மாவட்டத்தில் முடிவுக்கு வந்தது. இம்முறை கிள்ளானில் இந்த புதிய திட்டத்தை தொடக்கியுள்ளோம். புதிய இடங்களை இலக்காக கொண்டு இந்த நிகழ்வுகளை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
இந்த நிகழ்வுகளில் உரையாற்றுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதையும் தாண்டி இல்திஸாம் சிலாங்கூர் திட்டத்தில் உள்ள 44 முன்னெடுப்புகள் குறித்த விளக்கத்தையும் பொது மக்களுக்கு வழங்குகிறோம். சிலாங்கூர் சாரிங் போன்ற நிகழ்வுகளில் பொது மக்கள் நேரடியாக பங்கேற்பதற்குரிய வாய்ப்பும் கிட்டுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


