ஷா ஆலம், பிப் 18- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 117 பணியாளர்கள் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றனர். இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணியை ஆற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக இந்த சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டதாக துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.
இந்த விருதை பெற்றவர்களுக்கு சான்றிதழும் 1,000 வெள்ளிக்கான எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு பத்திரமும் வழங்கப்பட்டன.
சிறந்த சேவையாளர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடமையுணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் சிறப்பான முறையில் பணியாற்றுவதற்குரிய உத்வேகத்தை இந்த விருது அவர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் முன்னோடி ஊராட்சி மன்றம் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக சிறப்பான சேவையை வழங்குவதற்குரிய தன்முனைப்பையும் இந்த விருது வழங்கும் நிகழ்வு மற்ற பணியாளர்களுக்கு வழங்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2022ஆம் ஆண்டிற்கான விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மாநில அரசின் மேம்பாட்டுப் பிரிவுக்கான துணைச் செயலாளர் டத்தோ ஜோஹாரி அனுவார் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
மாநகர் மன்றத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 19 பேருக்கு இந்நிகழ்வில் பாராட்டுப் பத்திரமும் 1,200 வெள்ளி பரிசும் வழங்கப்பட்டன.


