இஸ்தான்புல், பிப் 18- அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட இரு வலுவான நில நடுக்கங்கள் காரணமாக அந்நாட்டிலுள்ள 84,726 கட்டிடங்கள் தரைமட்டாயின.
அந்நாட்டின் 11 பிரதேசங்களில் உள்ள கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணியில் 7,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நகர திட்டமிடல் அமைச்சர் முராட் குரும் கூறினார்.
மோசமான நிலையிலுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியுள்ளதாக கூறிய அவர், இடிப்பதற்கு அடையாளம் காணப்பட்ட அக்கட்டிடங்களின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
சில நகரங்களில் புதிய கட்டிடங்களைக் கட்டும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கும். தீவிர ஆய்வுக்குப் பின்னரே புதிய கட்டிடங்களைக் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கட்டுமான விதிமுறைகளை முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால் இந்த பூகம்பத்தில் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டதாக துருக்கி அரசாங்கத்தை பல தரப்பினர் குறை கூறி வருகின்றனர்.
இந்த குறைகூறல்களைத் தொடர்ந்து கட்டுமானக் குத்தகையாளர்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.


