ஷா ஆலம், பிப் 17- பத்தாங் காலி உறுப்பினர் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கடந்த ஆறு மாதங்களாக சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதன் வழி அத்தொகுதி உறுப்பினர் ஹருமாய்னி ஓமார் சட்டமன்ற உறுப்பினருக்குரிய அனைத்து சலுகைகளையும் பெறுவதற்குரிய தகுதியை இழந்து விட்டதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
கடந்தாண்டு நவம்பர் 23 முதல் 30 வரை நடைபெற்ற கூட்டம், டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்டம் மற்றும் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து அவர் கொள்ளாததோடு அது குறித்து சபாநாயகருக்கு தெரிவிக்காமலும் இருந்ததையும் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் வருகையாளர் பதிவேட்டில் உள்ள தரவுகள் காட்டுகின்றன என்று இங் தெரிவித்தார்.
மேற்கண்ட தேதிகளில் நடைபெற்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதிலிருந்து விலக்களிக்கக் கோரி சபாநாயகரிடம் ஹருமாய்னி விண்ணப்பம் செய்ததற்கான எந்த சான்றுகளும் காணப்படவில்லை என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ஹருமாய்னி இறுதியாக கலந்து கொண்டதை வருகையாளர் பதிவேடு காட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
1959ஆம் ஆண்டு சிலாங்கூர் அரசின் அமைப்புச் சட்டத்தின் LXIX பிரிவில் குறிப்பிட்டபடி கடந்தாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆறு மாத காலமாக பத்தாங் காலி உறுப்பினர் அவைக்கு வரவில்லை.
ஆகவே, 1959ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அமைப்புச் சட்டத்தின் LXIX பிரிவின் கீழ் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 2023 ஜனவரி 18ஆம் தேதி முதல் ஹருமாய்னி வகித்த வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாகிறது என அறிவிக்கிறேன் என்றார் அவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சியாக விளங்கிய பெர்சத்துவின் சார்பில் ஹருமாய்னி அத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


