ஷா ஆலம், பிப் 17- சிலாங்கூரில் ஒருங்கிணைந்த டிங்கி ஒழிப்பு நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளவுள்ளது. மாநிலத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ள பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட், கோம்பாக் ஆகிய மாவட்டங்களை இலக்காக கொண்டு நேற்று தொடங்கி வரும் மார்ச் 22ஆம் தேதி வரை இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
டிங்கி நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக சுமார் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொசு விரட்டிகளை விநியோகித்தல், மருந்து தெளித்தல் மற்றும் வீடு வீடாகச் சென்று சோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
டிங்கிக்கு எதிரான இந்த நடவடிக்கையில் அரசு துறைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களோடு சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் குழு உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளும் பங்கு பெறும் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.


