அங்காரா, பிப் 17- தென் துருக்கியை கடந்த வாரம் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் குறைந்தது 36,187 பேர் வரை உயிரிழந்துள்ளது இது வரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.
ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 7.6 எனப் பதிவான அந்த நிலநடுக்கம் கஹாராமானாஸ் பிரதேசத்தை மையமிட்டிருந்தது. இதனால் சுற்றியுள்ள 11 பகுதிகள் கடுமையான சேதங்களுக்குள்ளான வேளையில் 1 கோடியே 30 லட்சம் பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வலுவான நிலநடுத்த்தின் தாக்கத்தை சிரியா, லெபனான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதோடு கணிசமான அளவு சேதத்தையும் ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 253,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பூகம்பம் ஏற்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 216,347 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.
அந்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 74 நாடுகளைச் சேர்ந்த 7,098 மீட்புப் பணியாளர்கள் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சு கூறியது.


