கோலாலம்பூர், பிப் 17- திருமணமாகாதோருக்காக பிரத்தியேகமாக ஒரு அறை கொண்ட வீடுகளை நகர்ப்புறங்களில் நிர்மாணிக்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. சிலாங்கூர் கூ 3.0 வீடமைப்புத் கொள்கையின் வாயிலாக இந்த திட்டம் அமலாக்கப்படும்.
இந்த தரப்பினருக்காக 450 சதுர அடி பரப்பளவில் கூடுதல் பட்சம் 114,750 வெள்ளி விலையில்இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
திருமணமாதோர் கட்டுப்படி விலை வீடுகளை வாங்குவதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில சீர்திருத்த நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
திருமணமாகாத மற்றும் தற்போதுதான் வேலைக்குச் சென்றுள்ள 30 வயதுக்கும் குறைவான தரப்பினரிடமிருந்து வரும் வீடுகளுக்கான அதிகப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வீடுகளுக்கான 55 விழுக்காட்டு விண்ணப்பங்கள் 29 வயதுக்கும் குறைவானவர்களிடமிருந்தும் 44 விழுக்காட்டு விண்ணப்பங்கள் 49 வயதுக்கும் குறைவானவர்களிடமிருந்தும் ஒரு விழுக்காட்டு விண்ணப்பம் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்தும் வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நகர்ப்புறங்களில் ஒரு அறை கொண்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இங்குள்ள புல்மன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.


