ஷா ஆலம், பிப் 17- நீர் தூய்மைக்கேட்டிற்கு காரணமானவர்களைத் தண்டிப்பதற்கு ஏதுவாக 2006ஆம் ஆண்டு நீர் தொழில்துறை சேவைச் சட்டத்தில் (சட்டம் 655) திருத்தம் செய்யும் இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சின் நடவடிக்கையை சிலாங்கூர் அரசு வரவேற்றுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முந்தைய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரையை அமலாக்குவதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தருணம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வந்துள்ளது என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இந்த சட்டம் 2020ஆம் ஆண்டில் திருத்தப்படும் என கூறப்பட்டது. எனினும், மூன்று ஆண்டு
கள் கடந்தப் பின்னரும் இந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த சட்டத் திருத்த அமலாக்கத்திற்காக தாங்கள் நீண்ட காலமாக காத்திருப்பதாக கூறிய அவர், இதனை மத்திய அரசு விரைந்து அமல் செய்யும் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
சுற்றுச்சூழல் விஷயத்தில் இதுநாள் வரை அக்கறை காட்டாமலிருந்த பெரிய நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த ஒரு கோடி வெள்ளி அபராதம் மிக முக்கியமானதாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
நீர் மாசுபாடு ஏற்படக் காரணமானவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு உண்டாகும் செலவை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற ஷரத்துகளும் அந்த சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


