அம்பாங் ஜெயா, ஜன 7- ஏழு புதுமுகங்கள் உள்பட 24 பேர் அம்பாங் ஜெயா நராண்மைக் கழக உறுப்பினர்களாக நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் ஐந்து பெண்களும் நகராண்மைக் கழக உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நகராண்மை கழக உறுப்பினர்களாக பதவி வகிப்பர்.
நகராண்மைக் கழகத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிரில் ஒருவரான ஜூலைஹா ஜமாலுடின் நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் மகமது பவுசி முகமது யாத்திம் கூறினார்.
நகராண்மைக் கழகம் புதிய கொள்கைகளை வகுப்பதற்கும் அனைத்துலக தரத்தில் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் நகராண்மைக் கழக உறுப்பினர்களிடம் உள்ள திறமை பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களுக்கு 172 உறுப்பினர்கள் ஒராண்டு தவணை காலத்திற்கு நியமிக்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கடந்த வாரம் கூறியிருந்தார்.


