ஷா ஆலம் ஜன 7- குறைந்தபட்ச சம்பள முறையின் அமலாக்கத்தை அரசாங்கம் சரி செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை தாம் உணர்ந்து உள்ளதாகவும் அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பாக வெளியிடப்படும் குறைகூறல் களை தாங்கள் ஆரோக்கியமான முறையில் ஏற்றுக் கொள்வதோடு காலத்திற்கேற்ப அதனை சரி செய்ய முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாம் ஒரு புறம் மேம்படுத்திக் கொண்டே மறுபுறம் அழித்துக் கொண்டு இருக்கிறோம். பெரும் திட்டங்களையும் அமல்படுத்துகிறோம், அதேசமயம் மனுக்குலத்தின் வாழ்வியல் மதிப்பு கூறுகளையும் அழிக்கிறோம் என்றார் அவர்.
இது போன்ற குறைகூறல்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். தவற்றை சரி செய்வதற்கான தளமாக அது விளங்குகிறது. என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு ஆர்.டி.எம்.மில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரதமருடனான சிறப்பு நேர்காணல் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.
ஐந்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் கடந்தாண்டு மே மாதம் முதல் தேதி தொடங்கி 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் பிறப்பித்திருந்தது.
எனினும், ஐந்துக்கு குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு இச்சட்டத்தை அமல்படுத்தும் முடிவை இவ்வாண்டு ஜூலை மாதம் வரை ஒத்தி வைப்பதாக அரசாங்கம் கடந்த டிசம்பரில் அறிவித்தது.


