வாஷிங்டன், ஜன 5 - அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பதின்ம வயதினர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஏனோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாக அனடோலு ஏஜென்சி ஓர் ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
ஏனோக் நகர காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பைச் சோதித்தபோது மூன்று பெரியவர்களும் ஐந்து பதின்ம வயதினரும் இறந்து கிடந்ததை கண்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டு இருந்ததாகத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பலியானவர்களின் அடையாளம் அல்லது வயது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
“இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் அனுதாபங்கள். தயவுசெய்து அவர்களுக்காகப் பிராத்தியுங்கள், ”என்று உத்தா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டார்.
- பெர்னாமா


