ஷா ஆலம், ஜன 3- வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது புஞ்சா ஆலம், தாமான் செண்டானா புஞ்சா பெஸ்தாரி வீடமைப்பு பகுதிக்கு நேற்று வருகை மேற்கொண்டார்.
அங்குள்ள சில வீடுகளில் சுவர்கள், கால்வாய்கள், குடியிருப்பின் பின்புறச் சாலை மற்றும் வீட்டின் கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது தாம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.
அப்பகுதியில் நில அமிழ்வு அல்லது நில நகர்வு ஏற்படுவதற்கான தொடக்கக்கட்ட அறிகுறியாக இந்த விரிசல்கள் விளங்குகிறது என்று பொறியியல் ஆலோசகரான தமது சகா தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளரும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகமும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது நிலவி வரும் நிச்சயமற்ற வானிலை மற்றும் அதிகமாக மழைப் பொழிவு போன்றவை இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.
பேரிடர் நிகழும் சாத்தியத்தை தவிர்ப்பதற்கு ஏதுவாக இந்த பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண்பதில் தமது தரப்பு சம்பந்தப்பட்ட அனைத்து துறையினருடனும் ஒத்துழைப்பு நல்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


