ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநில எல்லையில் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொண்ட தொழில் முனைவோருக்கு வர்த்தக கடனுதவியை வழங்க ஹிஜ்ரா அறவாரியம் முன்வந்துள்ளது.
தொழில் முனைவோருக்கு உதவும் அதேவேளையில் வர்த்தக நட்புறவு மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தவிருக்கிறோம். சிலாங்கூர் மாநிலத்துடன் எல்லையைக் கொண்டிருக்கும் நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் வர்த்தக கடனுதவி பெறுவதற்கு ஏதுவாக விதிமுறைகள் தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரா அறவாரியம் ஐ-பிஸ்னஸ், ஜீ டு ஹீரோ, கோ டிஜிட்டல், நியாகா டாருள் ஏசான் ஆகிய கடனுதவித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தொழில்முனைவோர் மேலும் வளர்ச்சி காணும் வகையில் இத்திட்டங்களை அது தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இவை தவிர, ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ, ஐ-பெர்மூசிம் ஆகிய வர்த்தக கடனுதவித் திட்டங்களோடு ஆக சமீபத்தில் ஐ-சோசியல் எனும் திட்டத்தையும் ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
ஹிஜ்ரா அறவாரியம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவ 55,834 தொழில்முனைவோருக்கு 71 கோடி வெள்ளி வர்த்தக கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தை தொடங்குவது முதல் அதனை விரிவாக்கம் செய்வது வரை இந்த அறவாரியத்திடமிருந்து கடன் பெற முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.
மேலும் அதிகமான தொழில் முனைவோர் பயன் பெறும் வகையில் ஹிஜ்ரா திட்டங்களை மேம்படுத்துவதற்காக கடந்தாண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த அறவாரியத்தின் 13 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


